×

வங்காள விரிகுடா, பெருங்கடல்கள் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சிகள்: ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தகவல்

சென்னை: வங்காள விரிகுடா மற்றும் பெருங்கடல்கள் பல நூறு ஜிகா டன்கள் அளவுக்கு கார்பன் டை ஆக்சைடை சேமித்து வைக்கக் கூடியவை என ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஐஐடி மெட்ராஸ் ரசாயன பொறியியல் துறை சார்பில் ஆராய்ச்சி நடந்து வருகிறது. அதில், இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடாவில் அதிகளவில் கார்பன் டை ஆக்சைடை (CO2) சேமித்து வைப்பதற்கு சாத்தியமான சேமிப்பகங்களைக் கண்டறிந்துள்ளனர்.

கடல் சூழலியலுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவிக்காமல் கார்பனை கட்டுப்படுத்த கடல்களின் முழுத் திறன் பயன்படுத்தப்படுவதுடன், மிகப் பெரிய அளவில் கார்பன் டை ஆக்சைடு சேமிப்பகமாகவும் இருப்பது ஆராய்ச்சியின் மூலம் கிடைத்த முக்கிய கண்டுபிடிப்பு. தேசிய கார்பன் கட்டுப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்ற இலக்குகளை இந்தியா அடைவதற்கு இந்த ஆராய்ச்சி உதவும். 500 மீட்டர் ஆழ்த்திற்கு கீழே கடல்சார் நிலைமைகளைப் பொறுத்து ஏறத்தாழ 150-170 கனமீட்டர் கார்பன் டை ஆக்சைடை ஒரு கன மீட்டர் வாயு ஹைட்ரேட் ஆக பிரிக்க முடியும்.

எனவே வாயு ஹைட்ரேட் அடிப்படையிலான சேமிப்பு இந்தியாவின் தொழிலக தொகுப்புகளில் கரிமநீக்கம் செய்யும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. கடலுக்கு அடியில் உள்ள வண்டல்களில் பெரிய அளவிலான வரிசைப்படுத்தலை உருவாக்குவதால், இந்தியாவின் நிகர பூஜ்ய உமிழ்வு இலக்குகளை எட்ட அறிவியல் உலகத்திற்கு இந்த ஆராய்ச்சி உதவும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸின் வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் ஜிதேந்திர சங்காவ் கூறும்போது, ‘‘மீத்தேன் ஹைட்ரேட்டுகள் பல மில்லியன் ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாமல் கடலில் இருக்கின்றன.

கார்பன் டை ஆக்சைடை விட மீத்தேன் அதிக ஆற்றல் மிக்க பசுமை இல்ல வாயுவாகும். இதை கருத்தில் கொண்டுதான் கார்பன் டை ஆக்சைடை கடலில் சேமிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் பரிசீலித்தனர். 2,800 மீட்டருக்கும் அதிக ஆழத்தில் கடல்நீரை விட கார்பன் டை ஆக்சைடு அடர்த்தி மிகுந்து காணப்படுவதையும், இதனால் கார்பன் டை ஆக்சைடு வெளியேற கூடுதல் ஈர்ப்புத் தடையை உருவாக்குவதையும் எங்களது ஆய்வு கண்டறிந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

The post வங்காள விரிகுடா, பெருங்கடல்கள் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சிகள்: ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bay of Bengal ,IIT ,CHENNAI ,IIT Madras Department of Chemical Engineering ,Dinakaran ,
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...